மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டு உயிர்பிழைத்தவர்களின் அனுபவங்கள்
உயிர்பிழைத்த பிறரின் அனுபவங்களைப் பற்றி படிப்பது உருக்கமாகவும் உற்சாகமூட்டுவதாகவும் இருக்கலாம். பல்வேறு நாடுகளில் உள்ள உயிர்பிழைத்தவர்களில் ஒரு சிலரை தேர்ந்தெடுத்து உங்களுக்காக இங்கே வழங்குகிறோம். இவை மார்பகப் புற்றுநோயை எதிர்த்து நீங்கள் போராடுவதற்கு உற்சாகமூட்டித் துணைபுரியும் என நாங்கள் நம்புகிறோம். அடையாளத்தை மறைப்பதற்காக, உயிர்பிழைத்தவர்களின் பெயர்கள் யாவும் மாற்றப்பட்டுள்ளன.
ராதா - இரண்டரை வருட மார்பகப் புற்றுநோய்க்குப்
பிறகும் உயிர்பிழைத்திருப்பவர்
எனக்கு இரண்டரை வருடங்களாக மார்பகப் புற்றுநோய் இருந்தபோதிலும் நான் உயிர்பிழைத்துக் கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, மிக ஆரம்ப கட்டங்களிலேயே மேம்மோகிராம் படத்தில் எனது புற்றுக்கட்டி காட்டப்பட்டது. அது 1 ஆம் கட்ட புற்றுநோய்.
நான் ஒரு லம்பெக்டாமி செய்துகொண்டேன்; ஒரு பக்கம் அக்குளுக்கு கீழ்ப்புறம் உள்ள நிணநீர்க் கணுக்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
கணுக்கள் அனைத்தும்புற்றுக்கட்டி இல்லாமல் சுத்தமாகவே இருந்தன. எனக்கு வேதிச்சிச்சை அறவே தேவைப்படவில்லை; எனினும், எனக்கு 35 முறை கதிர்வீச்சு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
மற்ற பெண்களைப் போலவே நான் என்னுடைய வருடாந்திர மேம்மோகிராம் படங்களை பற்றி சட்டைசெய்யவில்லை என்று நினைக்கிறேன்.
பிறகு, சந்தேகப்படும் படியான ஏதோ எனக்கு இருப்பதால் நான் ஓர் அல்ட்ராசவுண்டு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்ட போதும் கூட நான் உண்மையிலேயே கவலைப்படவில்லை.
பல வருடங்களுக்கு முன்பாக என் உடலிலிருந்து 2 தணிவான கட்டிகள் அகற்றப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை அல்ட்ராசவுண்டு பரிசோதனையை தொடர்ந்து ஒரு கோர் பயாப்சி செய்யப்பட்டது. அதில் சந்தேகமின்றி எனக்கு புற்றுநோய் இருப்பதாகக் காட்டியது.
என்னால் நம்பமுடியவில்லை. என்னுடைய குடும்பத்தில் வேறு எவருக்கும் ஒருபோதும் மார்பகப் புற்றுநோய் இருந்ததேயில்லை.
என்னால் கருத்தரிக்க முடியவில்லை என்பதைத் தவிர வேறெந்த பெரிய ஆபத்துக் காரணிகளும் எனக்கு இருந்திருக்கவில்லை. எனவே, ஆண்டவன் என் மீது இரட்டை சாபத்தை இறக்கிவிட்டானோ என்று நினைத்தேன்: முதலில், குழந்தையின்மை; இப்போது, புற்றுநோய்.
நமக்கு “புற்று” உள்ளது என்ற சொல்லை நாம் காதில் கேட்டவுடனே ஏதோ மரண தண்டனை விதிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுவது மனித இயல்பு என்று நினைக்கிறேன்.
நான் அப்படித்தான் உணர்ந்தேன். அறுவைசிகிச்சைக்கு முந்தைய நாள் நான் எங்கள் சாமி அறைக்குச் சென்று, எதிர்வரும் பிரச்சனைகள் அனைத்தையும் சமாளிக்க எனக்கு சக்தி தருமாறு வேண்டிக்கொண்டே இருந்தேன்.
அன்றிரவு நான் எங்கள் சாமி அறையிலிருந்து வந்த பிறகு, என் கணவர் தூங்கிவிட்டார் என்று எண்ணி படுக்கையில் சாய்ந்தேன்.
அப்போதும் நான் அழுதுகொண்டிருந்தேன். அவர் திரும்பி என்னைக் கட்டியணைத்து, நாங்கள் இருவரும் இதை ஒன்றுசேர்ந்து சமாளிக்கப் போவதாக எனக்கு ஆறுதல் கூறினார்.
பிறகு, அவர் என்னை இறுக்கமாகத் தழுவி சப்தமாக ஆண்டவனிடம் பிரார்த்தித்தார். என் மீது திடீரென்று ஆழ்ந்த அமைதி இறங்குவதாக நான் உணர்ந்தேன்.
எனக்கு நோய் குணமாகப்போகிறது என்பது எனக்குத் தெரியும். அந்தத் தருணத்தில் நான் என்னையே மறந்து இறைநினைவில் ஆழ்ந்தேன் என்று நினைக்கிறேன்.
எனக்கு முதலில் அறுவைசிகிச்சையும் பிறகு கதிவீச்சு சிகிச்சைகளும் நன்றாக நடந்தன. அறுவைசிகிச்சை மற்றும் சிகிச்சைகள் செய்யப்பட்டதிலிருந்து எனது மார்பகம் எப்போதும் புண்ணாக இருப்பதுபோல் தோன்றியது. சில சமயங்களில் இது எனக்கு பயமாக இருந்தது. பிறகு, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நான் மேம்மோகிராம் பரிசோதனை செய்துகொண்ட போதே அது சரியானது.
அப்போது தொடர்ந்து புண்ணான நிலையில் இருந்ததை நான் ஒரு நினைவூட்டலாக எண்ண முயற்சிக்கிறேன்; முன்பு ஆரம்பகட்ட நோய்க்குறி அறிதலிலும் வெற்றிகரமான அறுவைசிகிச்சை மற்றும் சிகிச்சைகளிலும் எனக்குக் கிடைத்த அருளின் நினைவூட்டல் இது என்று எண்ணுகிறேன்.
மார்பகப் புற்றுநோயால் துன்பப்பட்டுள்ள அல்லது எதிர்காலத்தில் துன்பப்படவுள்ள எல்லா பெண்களுக்கும் சேர்த்து நான் பிரார்த்திக்கிறேன்.
மேலும், மேம்மோகிராம்கள் மற்றும் ஆரம்பகட்ட கண்டறிதலுக்கு ஒரு பேராதரவாளராக நான் இருக்கிறேன். பெரும்பாலும், பிரார்த்தனை நிச்சயமாக பலன் கொடுக்கும் என்பதற்கும் நான் பேராதரவாளராக இருக்கிறேன். நான் தினமும் ஆண்டவனுக்கு நன்றி சொல்கிறேன்.

வாசகர்கள் அனைவரையும் இந்த திகில் நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு வாழ்த்துகிறேன்.
சஞ்சோலி - ஏழு ஆண்டு மார்பகப் புற்றுநோய்க்குப்
பிறகும் உயிர்பிழைத்திருப்பவர்
எனக்கு 41 வயதாகிறது; இன்னும் நான் என் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு எனக்கு அழற்சிகூடிய மார்பகப் புற்றுநோய் (ஐபிசி) இருப்பதாக நோய்க்குறி அறியப்பட்டது.
எனது இடது மார்பகத்தில் ஒரு சினப்பு இருப்பதை நான் கவனித்தேன். அடுத்த நாள் காலையில் என் மார்பகத்தை என்னுடைய பிராவிற்குள் அடக்கமுடியாத அளவுக்கு அது பயங்கரமாக வீங்கியிருந்தது.
நான் வீட்டுக்குச் சென்று, என்னுடைய குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு, தாமத்திக்காமல் திங்கள்கிழமை காலையில் என் குடும்ப மருத்துவரை அழைத்தேன்.
12 நாட்கள் கழித்து, பல ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனைகளை செய்துகொண்ட பிறகு, எனக்கு அழற்சிகூடிய மார்பகப் புற்றுநோய் (ஐபிசி) இருப்பதாக நோய்க்குறி அறியப்பட்டது. அது மிகக் கொடூரமான, மிக வேதனையளிக்கக்கூடிய மார்பகப் புற்றுநோய்.
நான் ஸ்கேன் முடிவுகளை பெற்றபோது என் உடலின் வேறெந்தப் பகுதிக்கும் புற்றுநோய் பரவியிருக்கவில்லை. நான் முற்றிலும் புதியதொரு வாழ்க்கையை தொடங்கினேன்.
இந்தப் புற்றுநோயை எதிர்த்துப் போராடி அதை முறியடித்து இங்கே என் குடும்பத்தாருடன் தொடர்ந்து வாழ்வதே எனது இலட்சியம். 2 மகன்களை நான் வளர்த்து ஆளாக்க வேண்டியுள்ளது; அதற்குப் பிறகு, என்றாவது ஒரு நாள் என் பேரப் பிள்ளைகளை பார்க்கவேண்டும்.
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை எனக்கு கீமோதெரபி (வேதிச்சிகிச்சை) அளிக்கப்பட்டது. செப்டம்பர் 1 அன்று இடதுபக்க ரேடிகல் மாஸ்டெக்டாமி மாற்றியமைக்கப்பட்டு, அக்டோபர் இறுதியில் 38 சுற்றுகள் கதிர்வீச்சு சிகிச்சை தொடங்கியது.
நான் ஈஸ்ட்ரோஜென் நெகடிவ் மற்றும் எச்ஈஆர்2+ கொண்டவள்; இதனால், புற்றுநோய் மீண்டும் ஏற்படுவதற்கான மிக உயர் ஆபத்து உள்ளது. மீண்டும் ஏற்படுவதை தடுத்துவிடுவதற்கு நான் வாரந்தோறும் ஹெர்செப்டின் உட்செலுத்தல்களை எடுத்துக்கொள்கிறேன்.
ஏறக்குறைய 8 மாதங்களாக என் தலையில் சொட்டை இருந்தது; இனி ஒருபோதும் நான் முடி உதிர்வதை குறித்து குறைபட்டுக்கொள்ள மாட்டேன்.
நான் மிகவும் நோயுற்று இருந்தேன்; கீமோதெரபி கொடுக்கப்படும்போது வாரயிறுதி நாட்களில் கூட படுக்கையை விட்டு வெளியேறக் கூடாது. எனினும், என்னுடைய நோயியல் அறிக்கை பிரமாதமான முடிவுகளை காட்டியது; என்னுடைய மரபணுப் பரிசோதிப்பில் கவலைக்கிடமான எவ்வொரு மரபணுத் திரிபும் காட்டப்படவில்லை.
நான் ஆரம்பத்திலிருந்தே மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். முதல் நாள் தொட்டு நான் என்னுடைய புற்றுநோயுடன் பேசுவேன். அது என் உடலுக்குள் இருப்பதை நான் வரவேற்கவில்லை என்றும், நானும் கீமோவும் அதை கொலைசெய்து கொண்டிருக்கிறோம் என்றும் அதனிடம் கூறுவேன்.
என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் மருத்துவர்கள் குழுவும் எனக்கு பேராதரவு அளித்தார்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் எல்லோரும் எனக்கு பக்கபலமாக இருந்தது உண்மையிலேயே அருள் தான்.
ஆயுள் குறைந்தகாலம் தான் மேலும் அதில் புற்றுநோய் எல்லா விஷயங்கள் குறித்தும் ஒரு புதிய பார்வையை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு நாள் காலையிலும் மேகங்கள் வெவ்வேறுவிதமாகத் தோன்றுகின்றன; அதே போல நானும் இயல்பு நிலையை அடையமுடியாத ஒரு புதிய ‘இயல்பு நிலையை’ ஏற்றுக்கொண்டு நான் வாழ்க்கையை அணுகுகிறேன்.. 
வாழ்க்கை ஓர் உண்மையான அன்பளிப்பு!
லாரா - மேம்மோகிராம் நுட்பப் பணியாளர்
நான் 1993 இல் அமெரிக்க விமானப் படை மூலம் மேம்மோகிரா·பி துறையில் பயிற்சி பெற்றேன். உண்மையிலேயே நான் மேம்மோகிரா·பி பயிற்சி பெற விரும்பவில்லை.
அப்போது நான் இளமையாகவும் விளையாட்டுத் தனமாகவும் இருந்தேன்; அது ஒரு மருத்துவப் பரிசோதனை என்றபோதிலும், இன்னொரு பெண்ணின் மார்பகங்களை கையாளுவது ரொம்ப இயல்பற்ற விஷயம் என நினைத்துக்கொண்டேன்.
பிறகு நாளடைவில், மேம்மோகிராம் செய்துகொள்வதன் முக்கியத்துவம் குறித்து நான் மென்மேலும் விழிப்புணர்வு அடைந்தேன்.
எனது 67 வயது பாட்டியுடன் உரையாடும்போது இதுபற்றி யோசிக்கத் தலைப்பட்டேன்.
அவர் எப்போதாவது மேம்மோகிராம் பரிசோதனை செய்துகொண்டுள்ளாரா என கேட்டபோது, “இல்லை, எனக்கு வலி எதுவும் இல்லையே, பின்னே அது எதற்கு மகனே?” என்று அவர் பதிலளித்தார். அதற்கு நான், எல்லா புற்றுநோய்களும் வலி ஏற்படுத்துவதில்லை மற்றும் எல்லா நோய்நிலைகளுக்கும் வலி முதலானவை போன்ற அறிகுறி எதுவும் இருப்பதில்லை என்று அவருக்கு விளக்கினேன்.
அவர் ஒரு மேம்மோகிராம் பரிசோதனை செய்துகொள்ள சம்மதித்தார். அவர் பரிசோதனை செய்து இரண்டு வாரங்கள் கழித்து அவருக்கு ஓர் டபுள் மாஸ்டெக்டாமி செய்யப்பட்டது. அவர் இன்னொரு ஆறு மாதங்கள் தாமத்திருந்தால் அவளுக்கு தீர்வு எதுவும் இருந்திருக்காது என அவளிடம் மருத்துவர் கூறினார்.
என்னுடைய பாட்டி ரொம்ப அதிர்ஷ்டமானவர். அவருக்கு இப்போது 76 வயதாகிறது என்றாலும், அவர் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்.
தழும்புகளையும் மார்பகங்கள் இல்லாத நிலைமையையும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார்; ஏனெனில், அவர் நல்ல செழுமையாக இருந்தவர். எனினும், மார்பகங்களை மட்டுமே இழந்து தான் உயிர்பிழைத்துக் கொண்டதை எண்ணி அவர் சந்தோஷப்பட்டார். அவர் வழக்கமாக பரிசோதிப்புகளை செய்துகொள்கிறார்; அநேகமாக அவர் நம் எல்லோரையும் விட நீண்டகாலம் உயிர்வாழலாம், அவர் ஒரு கல்தூண்!
நான் பெண்களிடம் எப்போதும் மேம்மோகிரா·பி குறித்து கூறுவேன்.
ஏராளமான பெண்கள் இந்தப் பரிசோதனையின் அசௌகரியம் குறித்து கவலைப்பட்டு அதைச் செய்துகொள்வதில்லை என்ற விஷயம் விசித்திரமாக உள்ளது.
உங்கள் மார்பகங்களை புற்றுநோய்க்கு பறிகொடுத்து உடலின் பிற பகுதிகளுக்கு அந்நோய் பரவுவதை விட ஒருசில நிமிடங்கள் அசௌகரியமாக இருப்பது எவ்வளவோ மேல்.
மேம்மோகிரா·பி எடுக்கும் தொழிலை தேர்ந்தெடுத்ததற்கு ஆண்டவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்; இல்லாவிட்டால், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இருந்திருக்கமாட்டாள்.
அந்த வாய்ப்பை பெற்றபோது யாரோ எங்களைத் தேடிக்கொண்டிருந்தார் போல நான் உணருகிறேன்.
நான் இப்போது மேலும் அறிவார்ந்தவளாக ஆகிவிட்டேன்; நோயாளிகளுக்கு பரிசோதனை செய்வதா என்றெல்லாம் நான் இப்போது கவலைப்படுவதில்லை. பல பெண்களின் உதட்டில் என்னுடைய பெயர் முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது; ஒவ்வொரு வருடமும் அவர்கள் எங்களிடம் வருகிறார்கள்.
நான் இராணுவத்திலிருந்து விடைபிரிந்த போது, அந்த நோயாளிகளில் பலர் மிகவும் கவலைப்பட்டார்கள்.
அது மிகவும் உருக்கமாக இருந்தது; அவர்களுடன் உரையாடியது இன்னும் என் நினைவில் உள்ளது.
நான் இப்போது ஒரு கேட் ஸ்கேன் நுட்பப் பணியாளர்; எனினும், விரைவில் இரண்டு தொழிலையும் (மேம்மோகிராம் பரிசோதனையையும்) செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எல்லா பெண்களும் மாதந்தோறும் சுய-மார்பகப் பரிசோதனையையும் வருடந்தோறும் பரிசோதிப்புகள் மற்றும் மேம்மோகிராம் பரிசோதனைகளையும் செய்துகொள்ளுமாறு நான் வலியுறுத்தி வேண்டிக்கொள்கிறேன்.
கோமல் - 4 வருட மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகும்
உயிர்பிழைத்திருப்பவர்
நான் 4 வருட புற்றுநோய்க்குப் பிறகும் உயிர்பிழைத்திருப்பவள். நான் குளிக்கும்போது எனது இடது மார்பகத்தில் புடைப்பு இருப்பதை நான் கண்டறிந்ததற்கு 10 மாதங்களுக்கு முன்பு நான் மேம்மோகிராம் செய்துகொண்டேன்.
அதன் அளவைக் கண்டபோது எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது; ஏன் இதை இதற்கு முன்பே கவனிக்கவில்லை என்று எண்ணினேன். ஆனால், என்ன செய்வது! அப்போது நான் ஒரு முட்டாள்; மாதாந்திர சுய பரிசோதனைகளை செய்துகொள்ளாதவள்; அது மற்ற பெண்களுக்கே நிகழும் என கற்பனை செய்துகொண்டவள்! பிறகு என்ன! ஒரே வாரத்திற்குள் பரிசோதனைகள், 2 ஊசி பயாப்சி, மேம்மோகிராம், ஓர் அல்ட்ராசவுண்டு ஆகியவை எல்லாம் நடைபெற்றன.
“புற்று” என்ற சொல் - அதாவது, மார்பகப் புற்றுநோய் - எனக்கு உள்ளதாக நோய்க்குறி அறியப்பட்டது. திடமாக இருந்த எனக்கு இது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
ஒரு வாரம் கழித்து அறுவைசிகிச்சை மேற்கொள்ள முன்பதிவு செய்யப்பட்டது. என்னுடைய புற்றுக்கட்டி 2.6 செண்டி மீட்டர் இருந்தது; பத்து மாதங்களில் அது எப்படி இவ்வளவு பெரிதாக வளர்ந்தது என்பது ஒரு புதிராகவும் பயமூட்டுவதாகவும் இருந்தது!
அது எனக்கு திரும்ப வரக்கூடாது என நான் விரும்பியதால், எச்சரிக்கை உணர்வுடன் நான் ஒரு முழு மாஸ்டெக்டாமி செய்துகொள்ள முடிவுசெய்தேன்.
என்னை மிகவும் சுகமில்லாமல் ஆக்கிய, ரொம்ப வலி உண்டாக்கிய, கை மற்றும் கால் விரல் நகங்களை இழக்கச்செய்த, வாய் புண்கள் ஏற்படுத்திய, இடது கையில் நிரந்தமாக நரம்பு எல்லை சேதத்தை உருவாக்கிய 8 சுற்றுகள் கீமோதெரபி பெற்றுக்கொண்ட பிறகும், எனது சிகிச்சைப் பயணம் நெடுக என்னால் மிகவும் சாதக நோக்கும் மனப்பான்மையும் பராமரிக்க முடிந்தது.
என்னுடைய பயணம் நெடுக எனது கணவர் ஸ்காட் பாறை போன்று எனக்கு பக்கபலமாக இருந்தார்; யாரும் தன்னந்தனியாக இந்தப் பயணத்தை அனுபவித்துவிடக்கூடாது.

ஆதரவளித்ததற்காக எனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி.
ஆக்னெஸ் - 12 வருட மார்பகப் புற்றுநோய்க்குப்
பிறகும் உயிர்பிழைத்திருப்பவர்
நான் 12 வருட மார்பகப் புற்றுநோய்க்குப் பிறகும் உயிர்பிழைத்திருப்பவள்; பரவிய நிலையிலுள்ள மார்பகப் புற்றுநோயுடன் இப்போது போராடிக்கொண்டிருப்பவள்.
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு 34 வயதில் எனக்கு III ஆம் கட்ட மார்பகப் புற்றுநோய் இருப்பதாக நோய்க்குறி அறியப்பட்டது; எனவே, ‘எவரஸ்ட் மலை’ போல சிகிச்சைகள் அளிக்கப்பட்டன: மாஸ்டெக்டாமி, தரமான கீமோதெரபி, பிறகு செல் ட்ரான்ஸ்ப்ளாண்ட் மற்றும் ரேடியேஷன் சிகிச்சையுடன் கூடிய உயர் வழங்குதல்-அளவு கீமோதெரபி எல்லாம் அளிக்கப்பட்டன.
நான் 12 வருட கால தண்டனை அனுபவித்த பிறகு, அநேகமாக அது எனக்கு குணமடைந்துவிட்டது என்று நினைத்தேன்.
ஆனால் ஓர் அல்ட்ராசவுண்டு, சீடீ ஸ்கேன் மற்றும் ஈரல் பயாப்சி செய்தபோது, ஈரலுக்கு பரவிய நிலையிலுள்ள IV ஆம் கட்ட மார்பகப் புற்றுநோய் எனக்கு இருப்பதாக நோய்க்குறி அறியப்பட்டது.
சமீபத்தில் எனக்கு ஒரு கெட்ட வயிற்றுக் கோளாறு இருந்ததைப் பற்றி என்னுடைய பொது மருத்துவரிடம் நான் கூறியதாலேயே ஈரலில் புற்றுநோய் பரவியுள்ள நிலை கண்டறியப்பட்டது. எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. நான் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுபோல் உணர்கிறேன்.
IV ஆம் கட்ட மார்பகப் புற்றுநோயிற்கு உள்ள மரபுவழக்க சிகிச்சையில் குணமடையும் நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்பதால், நான் ஓர் ஒருங்கிணைந்த அணுகுமுறை சிகிச்சையை தெரிவுசெய்திருக்கிறேன்: எண்டோக்ரைன் சிகிச்சை, இயற்கைவைத்திய புற்றுநோய் சிகிச்சை, குறைந்த-சர்க்கரை உணவுகளை உட்கொள்ளுதல், மற்றும் ஆற்றல் சிகிச்சை, பிரார்த்தனை, கீகாங், கனவு காணுதல் போன்ற பற்பல இணை சிகிச்சைகள்.
புற்றுநோயை சமாளித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் உடலின் மற்ற பகுதிகளை இயன்றளவுக்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதே எனது குறிக்கோள்.
நான் வழக்கமாக நீச்சல், நடை, மலையேற்றம், நெடுந்தூர பனிச்சறுக்கு ஆகிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறேன்.
மார்பகப் புற்றுநோய் கொண்ட எல்லா பெண்களுக்கும் நான் கூறவிரும்பும் செய்தி: நம்பிக்கையை இழக்காதீர்கள், உங்களுக்கு அர்த்தமுள்ள சிகிச்சையை தேர்தெடுங்கள், சொந்தமாக ஆராய்ச்சி செய்து ஊட்டமான உணவுகளை உண்ணுங்கள், இயன்றளவு ஆரோக்கியமாக வாழுங்கள்!
உருவாக்கியோர்




www.magnahealthsolutions.com