ஆரம்ப கட்ட நுரையீரல் புற்றுநோய்
கண்டறிதல்/ஸ்கிரீனிங்
ஸ்கிரீனிங்
அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்களுக்கு புற்றுநோய் போன்றதொரு நோயை கண்டறிவதற்காக பயன்படுத்தப்படும் சோதனைகள் மற்றும் பரிசோதனைகள்
ஆரம்ப கட்ட கண்டறிதல்
சாதாரணமாக நிகழ்ந்திருப்பதைக் காட்டிலும் முன்கூட்டியே நுரையீரல் புற்றுநோயை நோய்க்குறி அறிவதற்கு வகைசெய்யும் ஓர் அணுகுமுறை
நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப
கட்டத்தில் கண்டறிய முடியுமா?
வழக்கமாக, நுரையீரல் புற்றுநோய் ஏற்கனவே ஒரு முதிர்ந்த, குணப்படுத்தவியலாத கட்டத்தை அடைந்திருக்கும் வரை அதன் அறிகுறிகள் தோன்றுவதில்லை.
நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் தோன்றுகிறபோது கூட, அவை புகைப்பிடிப்பதால் ஏற்படும் நோய்த்தொற்று அல்லது நீண்டகால விளைவுகள் போன்ற பிற பிரச்சனைகள் என்பதாக பலர் தவறாக இனங்காணுவதற்கு சாத்தியம் உள்ளது. இதனால் நோய்க்குறி அறிதல் தாமதமாகலாம்.
சில நுரையீரல் புற்றுநோய்கள் பிற மருத்துவ நிலைமகளுக்கான பரிசோதனைகளின் விளைவாக கண்டறியப்படுவதால், அவை ஆரம்ப கட்டத்திலேயே நோய்க்குறி அறியப்படுகின்றன.
உதாரணமாக, இதய நோய், நிமோனியா அல்லது பிற நுரையீரல் நோய் நிலைகள் உள்ள நோயாளிகளுக்கு வேறு காரணங்களுக்காக செய்யப்படும் படமெடுத்தல் பரிசோதனைகள் (நெஞ்சு எக்ஸ்-ரே அல்லது நெஞ்சு சிடீ ஸ்கேன் போன்றவை), பிரான்கோஸ்கோபி (ஒரு நெகிழ்வான விளக்கிட்ட குழல் மூலம் நுரையீரல் காற்றுத் தடங்களை நோக்குதல்), அல்லது கோழைப் பரிசோதனை (இருமலினால் வெளிப்படும் கபம் உள்ள செல்களின் நுண்ணோக்கிப் பரிசோதனை) போன்றவற்றால் நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்படலாம்.
இத்தகு நோயாளிகளில் ஒரு சிறு தொகையினருக்கு உடல்நலம் தேறி அவர்கள் நுரையீரல் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடையலாம்
நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் என்றால் என்ன?
நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு நுரையீரலில் ஆரம்பகட்ட புற்றுநோய் அடையாளங்கள் உள்ளதா என மருத்துவர்கள் சோதிக்கும் வழிமுறையே நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் ஆகும்.
தற்போதைக்கு, புற்றுநோய் மரணங்களை தடுக்க ஸ்கிரீனிங் எவ்வளவு பயனுள்ளது என்பது குறித்தோ அல்லது (ஒருவேளை பொருந்தினால்) யாருக்கு ஸ்கிரீனிங் செய்யப்படவேண்டும் என்பது குறித்தோ மருத்துவர்கள் உறுதிப்பட அறிவதில்லை.
நெஞ்சு எக்ஸ்-ரே மற்றும் “குறைவான கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன்” ஆகியவை சிறந்த ஸ்கிரீனிங் கருவிகளா என கண்டறிவதற்காக, அவர்கள் அவற்றை ஆராய்ந்துவருகின்றனர்.
ஓர் இயல்பான சிடீ ஸ்கேன் பரிசோதனையை காட்டிலும் ஒரு குறைவான கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன் நன்கு குறைவாக கதிர்வீச்சை பயன்படுத்துவதோடு, அது நுரையீரல்கள் குறித்து ஓர் இயல்பான எக்ஸ்-ரே படத்தை விட மேலும் விரிவான காட்சியை அளிக்கிறது.
எவ்வாறாயினும், எக்ஸ்-ரே எடுப்பது ஸ்கிரீனிங்கிற்கு பயன்படுவதில்லை.
மறுபுறம், குறைவான கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன் பரிசோதனை, நுரையீரல் புற்றுநோயிற்கான உயர் ஆபத்து கொண்ட சிலருக்கு உதவிகரமான ஸ்கிரீனிங் கருவியாக விளங்கலாம்.
புற்றுநோய் வளர்ச்சியடைந்து, பரவி, பிரச்சனைகளை உண்டாக்க வாய்ப்புக் கிடைப்பதற்கு முன்பாக அதை கண்டறிவதே நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் பரிசோதனையின் நோக்கமாகும்.
புகைப்பிடிப்பவர்களுள் வழக்கமான எக்ஸ்-ரே மூலம் ஸ்கிரீனிங் செய்யப்படுபவர்களைக் காட்டிலும் குறைவான கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன் மூலம் ஸ்கிரீனிங் செய்யப்படுபவர்கள் நுரையீரல் புற்றுநோயால் மரணிப்பதற்கான வாய்ப்பு குறைவு.
இருப்பினும், மிகுந்த புகைப்பழக்கம் உடைய அனைவருக்கும் குறைவான கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன் பரிசோதனைகளை பரிந்துரைக்க இன்னும் நிபுணர்கள் தயாராக இல்லை. இதற்குக் காரணம், ஆராய்ச்சி ஆய்வுக்கு வெளியில் - “நிஜ உலகில்” - ஸ்கிரீனிங் அதேபோல் நன்றாக பலனளிக்குமா என அறியப்படுவதில்லை.
மேலும், ஸ்கிரீனிங் முறையில் சில ஆபத்துகளும் அடங்கியுள்ளது; ஒருவருக்கு இயல்பற்ற ஸ்கிரீனிங் பரிசோதனை முடிவுகள் காட்டப்பட்டால் அவருக்கு கூடுதல் பரிசோதனைகள் தேவைப்படலாம் என்பதும் இதில் அடங்கும்
நுரையீரல் புற்றுநோய் உண்டாவதற்கான அல்லது அதனால் மரணிப்பதற்கான வாய்ப்பை குறைப்பதற்கு மிகச்சிறந்த வழி, புகைப்பழக்கத்தை விட்டுவிடுவதே.
நீங்கள் எவ்வளவு அதிகமாக அல்லது எவ்வளவு காலமாக புகைப்பிடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல.
இப்போதே புகைப்பழக்கத்தை விட்டுவிடுவது நுரையீரல் பிரச்சனைகளுக்கு மட்டுமல்லாமல் இதய நோய் மற்றும் வேறு பல புற்றுநோய்களுக்குமான வாய்ப்புகளை குறைக்கும்.
யாருக்கு நுரையீரல் ஸ்கிரீனிங்
செய்யப்பட வேண்டும்?
நுரையீரல் ஸ்கிரீனிங் யாருக்கு செய்யப்பட வேண்டும் (அல்லது யாருக்காவது செய்யப்பட வேண்டுமா?) என்பது தெளிவாக அறியப்படுவதில்லை.
தற்போதைக்கு, வருடக் கணக்கில் பலத்த புகைப்பழக்கம் உடையவர்கள் ஸ்கிரீனிங் பரிசோதனையின் சாதக பாதகங்களை தங்களுடைய மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பிறகு ஸ்கிரீனிங் தங்களுக்கு சரியான வழி தானா என்பதை அவர்கள் தங்கள் மருத்துவரின் உதவி கொண்டு முடிவுசெய்யலாம்.
ஸ்கிரீனிங் செய்வதற்கு முடிவெடுக்கும் போது இவ்விஷயங்களை கருதுவது அவசியம்:
உங்கள் பொதுவான சுகாதாரம் மற்றும் ஆபத்து அளவு
எந்த அளவுக்கு மற்றும் எவ்வளவு காலமாக நீங்கள் புகைப் பழக்கம் கொண்டிருந்தீர்கள், இப்போதும் நீங்கள் புகைப்பழக்கம் கொண்டிருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து உங்கள் ஆபத்து அளவு அமைந்திருக்கும்.
ஸ்கிரீனிங் செய்வதற்கான செலவு
நுரையீரல் புற்றுநோய் ஸ்கிரீனிங் நிபுணர்களை அணுகும் வசதி
குறைவான கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன் படங்களுக்கு விளக்கமளிப்பதில் அல்லது ஒரு பரிசோதனை இயல்பற்ற முடிவை வழங்கினால் என்ன செய்வது என முடிவுசெய்வதில் எல்லா மருத்துவர்களும் நிபுணர்கள் அல்லர். மிகுந்த அனுபவம் கொண்ட ஒருவர் ஸ்கேன் படத்திற்கு விளக்கமளித்தாலே ஸ்கிரீனிங் உதவிகரமாக இருக்கும். மேலும், ஏதேனும் இயல்பற்ற முடிவுகள் இருப்பின், நுரையீரல் புற்றுநோய்க்கு நோய்க்குறி அறிவதில் நிபுணராக உள்ள ஒரு மருத்துவரால் அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
நுரையீரல் புற்றுநோயிற்காக ஸ்கிரீனிங் செய்வதன் பலன்கள் யாவை?
சிகிச்சை அளிப்பதற்கு எளிதாக இருக்குமளவு ஆரம்ப கட்டத்திலேயே அதைக் கண்டறிய மருத்துவர்களுக்கு உதவுவதே, ஸ்கிரீனிங் பரிசோதனையின் முக்கிய பலன்.
இது, நுரையீரல் புற்றுநோயால் மரணிக்கும் வாய்ப்புகளை குறைக்கலாம்.
நுரையீரல் புற்றுநோய் உள்ளதா என அறிவதற்காக ஸ்கிரீனிங் செய்வதன் பின்னடைவுகள் யாவை?
பொய் நோயறிதல்கள்
குறைவான கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன் சில சமயங்களில் “பொய் நோயறிதல்களை” காட்டலாம்; அதாவது, ஒருவருக்கு புற்றுநோய் இல்லாதபோதிலும் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக அது சுட்டலாம்.
இது தேவையில்லாத பல கவலைகளுக்கும் மேலும் பல பரிசோதனைகளுக்கும் வழிவகுக்கலாம்.
உதாரணமாக, பொய் நோயறிதல்கள் காட்டப்படும் சிலருக்கு முழு-கதிர்வீச்சு-அளவு பின்தொடர் சிடீ ஸ்கேன்கள் செய்யப்படும்; இவை அவர்களை மேலும் அதிகமாக கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்தும். மேலும், சில சமயங்களில் அவர்களுக்கு ஒரு நுரையீரல் பயாப்சி தேவைப்படலாம்; இந்த நடைமுறையில், ஒரு சிறிய நுரையீரல் திசு மாதிரி எடுக்கப்படும். இந்த நடைமுறை வலி உண்டாக்கக்கூடியதாகவும், இரத்தக்கசிவு அல்லது உருக்குலைந்த நுரையீரல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடியதாகவும் விளங்கலாம்
கதிர்வீச்சுக்கு வெளிப்படுதல்
அனைத்து எக்ஸ்-ரே பரிசோதனைகளையும் போலவே, சிடீ ஸ்கேன் பரிசோதனையும் உங்களை சிறிது கதிர்வீச்சுக்கு வெளிப்படுத்தும்.
முதல் ஸ்கிரீனிங் சிடீ ஸ்கேனிற்கு கதிர்வீச்சு-அளவு குறைவாக இருக்கும் என்றபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் ஸ்கேன் எடுக்கவேண்டிய தேவை இருக்கும்; எனவே, நீங்கள் கதிர்வீச்சுக்கு வெளிப்படுதல் மேலும் அதிகமாகும். இத்துடன், உங்களுக்கு இயல்பற்ற முடிவுகள் காட்டப்பட்டால், முழு கதிர்வீச்சு-அளவு சிடீ ஸ்கேன் எடுக்கவேண்டிய அவசியம் ஏற்படலாம்.
ஆபத்துக் காரணிகளை தவிர்ப்பதே, நுரையீரல் புற்றுநோய் மரணத்தை தவிர்ப்பதற்கான மிகச்சிறந்த வழி.
புகைப்பிடிப்பதை இப்போதே விட்டுவிடுங்கள்
உருவாக்கம்:
www.magnahealthsolutions.com